பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Tuesday, March 01, 2005

பட்ஜெட் 2005 - 3 - 10,000 ரூபாய் பிரச்சனை



இந்தப் பட்ஜெட்டின் சர்சைக்குரிய விஷயம் 10,000 ரூபாய்க்கு 10 ரூபாய் வரி விதிக்கும் முறை. இது பலமாக விவாதிக்கப்படுகிறது. பல எண்ணங்கள், வாதங்கள். வலைப்பதிவில் கூட இரு வேறானக் கருத்துக்கள். இது பற்றி எழுதிய அருணா கூட இது சரியான முடிவு என்று கூறியிருக்கிறார்.

அரசுக்கு வருமானத்தை உருவாக்கவும், அதே சமயத்தில் வரி ஏய்ப்பை தடுக்கவும் இந்தப் புது வரி மூலம் சிதம்பரம் முயற்சிக்கிறார் என்ற வகையில் இந்த வரி விதிப்பு முறை வரவேற்கத்தக்கது. ஆனால் இம் முறை நடைமுறைக்கு ஒத்து வராது என்பது எனது கருத்து.

தினமும் பல இலட்சம் பணம் எடுக்கும் பெரிய நிறுவனங்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். மற்றவர்களைப் பற்றி மட்டும் விவாதிப்போம்

சிதம்பரம் இந்த வரி விதிப்பு முறைக்கு ஆதரவாக கூறும் காரணங்கள் என்ன ?

  1. வங்கியில் இருந்து தினசரி நிறையப் பணம் எடுக்கப்படுகிறது. பிறகு இந்தப் பணம் மறைந்து விடுகிறது. இந்த புதிய வரி மூலம் எடுக்கப்படும் பணம் track செய்யப்படுகிறது. அரசுக்கும் வருமானம் கிடைக்கிறது. வரி ஏய்ப்பும் தடுக்கப்படுகிறது
  2. மக்களை காசோலை மூலம் பணம் எடுக்கும் முறைக்குத் தள்ள வேண்டும்
  3. பிரேசில் போன்ற நாடுகளில் வரி ஏய்ப்பை தடுக்க இம் முறை வெற்றிகரமாக அமலில் இருக்கிறது.

முதல் காரணத்தைப் பற்றிப் பார்ப்போம். அவரின் கருத்தில் உண்மை இருக்கிறது. பல லட்சம் சம்பாதிக்கும் பணக்காரர்களால் மட்டும் அல்ல. போதிய வருமானம் ஈட்டும் ஆனால் வரிக் கட்டத் தவறும் சாதாரண மக்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.


சம்பளம் வாங்குபவர்களின் பணத்தைப் பற்றி சிதம்பரம் கவலைப்படவில்லை. அவர்களின் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு இருக்கிறது. ஆனால் சம்பளம் வாங்காத பலரின் வருமானம் இவ்வாறு மறைந்து போவது உண்மை. இவர்கள் தான் முழுதாக வரி ஏய்ப்பவர்கள்.


உதாரணமாக இரு வியபாரி இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அவரின் வருமானம் track செய்யப்படுவதேயில்லை. அவராக பார்த்து ஏதாவது வருமானவரிச் செலுத்தினால் தான் உண்டு. ஆனால் வருமான வரிச் செலுத்தும் சம்பளம் வாங்குபவர்களை விட அவர் நிறைய வருமானம் ஈட்டக் கூடியவர் என்றால் அரசுக்கு இழப்பு தானே. அவர்களை இவ்வாறு ஏதாவது ஒரு வரிச் செலுத்த வைக்கத் தான் சிதம்பரம் முயற்சி செய்கிறார். இந்த வகையில் இந்த முறை வரவேற்கத்தக்கது.


ஆனால் அதற்கு விதிக்கப்பட்ட 10,000 ரூபாய் மிகக் குறைவு. வேண்டுமானால் ஒரு மாதத்திற்கு 1 லட்சம் அல்லது 50,000 என்ற உச்சவரம்பு வைக்கலாம். இதனை விட அதிக அளவு கூட வரி விதிக்கலாம். இம் முறை மூலம் வங்கியில் இருந்து பணம் எடுக்கும் எளியவர்கள் பாதிப்படைய மாட்டார்கள். இன்னும் கூட ஒரு படிச் சென்று வருமான வரிச் செலுத்துபவர்களை இம் முறையில் இருந்து விடுவிக்கலாம். இதனால் நாங்கள் ஏன் தேவையில்லாமல் மற்றொரு வரிச் செலுத்த வேண்டும் போன்ற கேள்விகளும் குறையும்.


இது நடைமுறைக்கு கொண்டு வர முடியும் ? முடியும்.

இப்பொழுது எல்லா வங்கிகளும் PAN எண் கேட்கிறார்கள். இதன் மூலம் யார் வருமான வரிச் செலுத்துகிறார்கள் என்பது தெரியும். நிறைய வங்கிகள் கணினி மயமாகி விட்டதால் இதனை செயல் படுத்துவதில் சிக்கல் இருக்காது. ஆரம்பத்தில் சிக்கல் இருக்கலாம். எல்லாப் புதிய முறைக்கும் ஆரம்பத்தில் சிக்கல் இருக்கவேச் செய்யும் ?

10,000 ரூபாய்க்கு 10 ரூபாய் மிகக் குறைவு என்றாலும், இந்த புது வரியின் நோக்கம் வரி ஏய்ப்பை தடுக்கவே என்பதால் ஒழுங்காக வரிச் செலுத்துபவர்களை இதில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது என் எண்ணம். இது கல்விக்கான ஒரு செஸ் என்றால் நிறையப் பேர் கேள்வி கேட்க மாட்டர்கள். ஆனால் வரி என்றாலே அது சைக்காலஜிக்கலாக ஒரு எதிர் வினையை ஏற்படுத்துகிறது.


அடுத்ததாக, மக்களை காசோலை மூலம் பணம் எடுக்கும் முறைக்குத் தள்ள வேண்டும் என்கிறார்.


இது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.


சென்னையில் இருந்து கொஞ்சம் நகர்ந்து செங்கற்பட்டுக்குச் செல்லுங்கள். அங்குள்ள எத்தனை வங்கிகளில் காசோலை பயன்படுத்தப்படுகிறது. அங்கிருந்து கொஞ்சம் நகர்ந்து ஏதாவது குட்டி ஊருக்குச் செல்லுங்கள், வங்கிகளில் காசோலையே இருக்காது. சிதம்பரத்தின் சொந்த ஊரான சிங்கங்கையில் கூட இதே நிலைமை தான் இருக்கும்.


பின் எப்படி காசோலையை பயன் படுத்த முடியும் ?


எல்லா வங்கிகளிலும் காசோலை வந்து விட வில்லை. ICICI, SBI போன்ற சில வங்கிகள் தான் நாடெங்கும் பல இடங்களில் கிளைகளை வைத்துள்ளன. காசோலைகளையும் வைத்துள்ளார்கள். ஆனால் நகரங்களை விடுத்து கிராமங்களில் உள்ளோர் காசோலை மூலமாக பணத்தைப் பறிமாறிக் கொள்ள முடியுமா ?


இது எல்லாவற்றையும் விட நம் நாட்டில் மக்கள் பலருக்கு பணம் எடுக்கும் Withdrawl form எப்படி நிரப்புவது என்று கூட தெரியாது. நான் வங்கிக்கு செல்லும் பொழுது நிறையப் பேருக்கு எழுதிக் கொடுத்திருக்கிறேன். இவர்கள் எப்படி காசோலையை நிரப்புவார்கள்.


இந்தச் சூழலில் பிரேசில் நாட்டுடன் நம் நாட்டை ஒப்பிட முடியாது.


அருணா தன் பதிவில் கூறியுள்ளது போல கடன் அட்டை (Credit Card) நிறுவனங்களுக்கு நல்ல கிராக்கி இருக்கும். ஆனால் இதுவும் கூட நகரங்களில் தான். மற்ற இடங்களில் கடன் அட்டையை வைத்து ஒன்றும் செய்ய முடியாது.


இது நீண்ட காலத்திற்கானத் திட்டம் தான். ஆனால் தற்போதையச் சூழலில் சாத்தியம் இல்லாதது. அதுவும் 10,000 ரூபாய் என்னும் பொழுது தான் எல்லோரும் இது குறித்து தீவிரமாக விவாதிக்கின்றனர். தொகை அதிகமாக இருந்திருந்தால் பிரச்சனையே இல்லை.


இது எல்லாவற்றையும் விட கறுப்பு பணம் வங்கிகளுக்கே வருவதில்லை என்பது வேறு விஷயம். வங்கிகளுக்கு வராமல் வேறு மார்க்கத்தில் எங்கோ மறைந்து விடுகிறது.


இந்தப் புது வரியால் வங்கிகளுக்குத் தான் நன்மை. தேவை என்றால் தவிர வங்கிகளில் இருந்து இனி யாரும் பணம் எடுக்க மாட்டார்கள்.


எது எப்படியிருந்தாலும் சிதம்பரத்தின் புத்திசாலித்தனம் பலிச்சிடுகிறது. வேறு எந்த நிதியமைச்சரும் இது வரை யோசிக்காத பல வரிச் சீர்திருத்தங்களை சிதம்பரம் தான் செய்திருக்கிறார். வரி ஏய்ப்பை தடுக்கும் முயற்சி என்ற வகையில் இந்த வரி ஒரு நல்ல ஆரம்பம். இது தீவிரமாக விவாதிக்கப்பட்டு சில மாற்றங்களுடன் வர வேண்டும் என்பது தான் என் எண்ணம்.

ஆனால் நிச்சயம் இது போன்ற வரி வேண்டும்.

2 மறுமொழிகள்:

Anonymous said...

நடைமுறை சாத்தியமற்றது என்ற உங்கள் கருத்தை வரவேற்கிறேன். இதைக் குறித்து ஓர் விவாதம் என்னுடைய ஜன்னலுக்கு வெளியே பதிவில் நடந்து கொண்டிருக்கிறது.

fringe benifits tax பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மாலன்

10:54 PM, March 01, 2005
Anonymous said...

Dear Malan,

Thanks for your commnets. I have posted an article about FBT



By: Sasi

4:00 AM, March 03, 2005